கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ஹஜ் யாத்திரை சென்று திரும்புவோர்களுக்கு விமான நிலையத்தில் இன்று முதல் பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் கேரளா வந்த ஒருவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு குரங்கம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 35 வயது நபரை 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மனைவி, குழந்தை உட்பட 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கேரளாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே, குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.
அதன்படி வெளிநாடு மற்றும் ஹஜ் யாத்திரை சென்று வந்தவர்களை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, இன்று முதல் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிக்கன் பாக்ஸ் (அம்மைநோய்) அறிகுறிகள் உள்ளவர்களும் உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் குரங்கம்மை நோய் பாதிப்புடன் வந்தவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் கேரளா சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அவரிடம் இருந்து தொற்று பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்









