கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…

சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தது. கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.  இன்றைய நவீன யுகத்தில், இந்தியா பொருளாதாரம், கல்வி,…

சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தது. கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம். 

இன்றைய நவீன யுகத்தில், இந்தியா பொருளாதாரம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட
அனைத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது. 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்
இந்தியாவின் கால்பந்து பயணம் என்பது கரடுமுரடான பாதைகாளாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலக போர் தொடங்குவதற்கு
முன்னதாகவே சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, உலக கோப்பை கால்பந்து தொடரை
நடத்துவதை ஒத்திவைத்தது.


1945ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலக போருக்கு பின் 1949ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு உலக கோப்பை போட்டிகளை நடத்த ஆயத்தமானது. அதன்படி 1950ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கான வாய்ப்பு வரலாற்று குறிப்பில் இடம்பிடிக்கச் செய்தது.

கிபி.19ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர்களால் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் கால்பந்து மோகம் என்பது, அன்று முதல் இன்று வரை விடாப்பிடியாக தான் இருந்து வருகிறது. இன்று பெரும்பாலோனோர் காதலிக்கும் பிரபல பெங்கால் கால்பந்து கிளப்புகளான மோகுன் பகன் 1889ஆம் ஆண்டும், மொஹம்மடன் ஸ்போர்டிங் 1891ஆம் ஆண்டும், ஈஸ்ட் பெங்கால் 1924ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்டது.


1911ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டியில், அப்போது கிழக்கிந்திய கம்பெனியால் நடத்தப்பட்டு வந்த காலனிய ஆட்சி முறையில் இருந்து வந்த கல்கத்தாவில், முதல் முறையாக இந்திய கிளப் அணியானது பிரித்தானிய அணியை எதிர்த்து போட்டியிட அனுமதிக்கப்பட்டது. அதில் பிரபல பெங்கால் கிளப் அணியான மோகுன் பகன் அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில், கிழக்கு யார்க்ஷயர் ரெஜிமென்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இப்போதைய இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பிரித்தானியர்களால் சித்திரவதை
அரங்கேறி வந்த தருணத்தில், அந்த வெற்றிக்கு பின்பு தான் இந்தியா தலை உயர்த்த தொடங்கியது. ஆனால் இந்தியர்கள், கால்பந்துக்கெனவே இருக்கும் பிரத்யேக காலணியை
தவிர்த்து வெறும் கால்களில் விளையாடுவதை வெளிநாட்டவர்களும் உற்று நோக்க
ஆரம்பித்தன.


அதன் பின்னர் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த வருடமே, முதல் முறையாக இந்திய அணியானது இங்கிலாந்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அதில் விளையாடிய இந்திய அணியானது வெறும் கால்களிலேயே விளையாடி பட்டையை கிளப்பியது பேசு பொருளானது. இந்த நிலையில் தான் சர்வதேச உலக கோப்பை போட்டிகள் மீண்டும் 1950ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டன.

அப்போது அதில் பங்கேற்க இருந்த 16 அணிகளில் ஒரு இடத்தை சர்வதேச கால்பந்து
கூட்டமைப்பு, ஆசிய நாடுகளுக்கு வழங்கியது. அந்த வாய்ப்பை ஆசியாவின் 3 நாடுகள்
நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எனவே 1950ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணியானது சி குழுவில் இடம்பெற்றது.


இந்த வாய்ப்பு சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்திற்கு இணையான மகிழ்ச்சி கொடுத்தாலும் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பிரச்னை என்னவென்றால், அந்த தொடரில் இந்திய வீரர்கள் காலணிகளை அணியாமல், வெறும் காலில் விளையாட சென்ற போது, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் மூலம் அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு அரசியல் என பலர் பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்து வந்தாலும், ஃபிஃபாவின் விதிமுறைக்கு உட்பட்டு இந்தியா செயல்படவில்லை என்பதற்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் அதற்கு பிறகு 60 மற்றும் 70களில் மட்டுமே இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுக்களில் கவனம் செலுத்தும் வகையில் முன்னேற ஆரம்பித்தது.

இந்நிலையில் தான் யாருமே எதிர்பாராத ஒரு வியக்கத்தக்க விதமாக 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றது. இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் பல நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வு தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகத்தை பெருமளவில் பரவச் செய்தது. 1987ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஒவ்வொரு பயணமும் கிரிக்கெட் விளையாட்டில் ரசிகர்களை அதிகரிக்க செய்ய தொடங்கியது.

அதன் பின்னர் இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் மீதான தாக்கம் படிப்படியாக
குறைய தொடங்கியது. இருப்பினும் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கால்பந்து மீதான ஆர்வம் குறையவில்லை என்பதற்கு சான்றே, இன்றும் பெருமளவில் அவர்கள் மீதான ஆர்வத்தையும், ஆதிக்கத்தையும் காட்டுகிறது. இருப்பினும் இந்திய கால்பந்து கழகத்தில் நிலவி வரும் அரசியல் நிலைப்பாடுகள் இந்தியாவை கால்பந்து விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு நகர செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

கிரிக்கெட், பேட்மிண்டன் என பல வகைகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் அதே நேரத்தில், கால்பந்து விளையாட்டின் மீது ரசிகர்களின் ஒத்துழைப்பும், இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லாததே, இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. நாளடைவில், இந்தியாவில் கால்பந்து என்பது பொழுது போக்கிற்காக மட்டுமே என்ற நிலை உருவாகி, அது மாற்று விளையாட்டாகவே பார்க்கப்பட்டு வருகிறது.


இதனை மாற்றி அமைத்து, இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பரப்ப செய்து, மேலும்
கூடுதலாக வலுப்படுத்தும் நோக்கில் தான் சமீப காலமாக, வெளி நாடுகளில் நடத்தப்பட்டு வரும் பிரபல கால்பந்து தொடர்களை போல இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. எனவே கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கால்பந்து விளையாட்டு உயிர் பெற்று வருவது மகிழ்ச்சியை தரும் அதே வேளையில், வரும் காலங்களில் உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா பங்கேற்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக சுனில் சேத்ரி சிறந்த வழிகாட்டுதலை பின்பற்றி இந்திய அணியின் தரவரிசையை உயர்த்தி வரும் அதே வேளையில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பது போல ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு அளிக்கும் வெகுமதியும், இந்திய கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே, இந்தியா கால்பந்திலும் கனவு கண்டவற்றை நினைவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.