ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள பதிவில், தனது முழு சிகிச்சைக்கான ஒரு வருட மருத்துவ செலவை ரஜினிதான் பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கான சிகிச்சைக்கு நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை அவரது மகனின் நண்பர்கள் தொடங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி செய்யாததால், இதுபோன்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக இணையதளத்தில் செய்திகள் பரவியது.
ஆனால், இது தவறான தகவல் என ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது.
உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினிகாந்த என தெரிவித்துள்ளார். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். ரஜினிகாந்த் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது ரஜினியின் நல்லெண்ணத்தையும், குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.









