இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.   விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி…

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் (Inspace) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தலில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஸ்கைரூட் ஏரோஸ் பேஸ் என்ற அந்த நிறுவனம் தனது விக்ரம்-எஸ் ராக்கெட்டை இன்று அனுப்பியது. 83 கிலோ எடையை தூக்கி சென்ற இந்த ராக்கெட், 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.

ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுவதாகவும், பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.