உக்ரைனில் இருந்து இரண்டாவது நாளாக 688 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் இருக்கும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை தோராயமாக 13,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்களில் கல்லூரி மாணவர்களும் கனிசமாக உள்ளனர்.
போர் தொடங்கிய நாள் முதலே தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் மூலம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் மக்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. முதல் நாளாக சனிக்கிழமை அன்று 219 இந்தியர்களை அழைத்துக்கொண்டு முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. இது தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று மட்டும் 688 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் 250 பேரை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் புடாபெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியா வந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது விமானத்தில் 240 பேர் வந்துசேர்ந்தனர். அடுத்தபடியாக 198 பேரை ஏற்றிக்கொண்டு மாலை 5.35 மணி அளவில் மூன்றாவது விமானம் வந்தடைந்தது. இதன் மூலம் நேற்று மொத்தமாக 688 பேர் இந்தியா வந்தடைந்தனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அழைத்துவரப்பட்டவர்கள் அனைவரும் உக்ரைனின் அண்டை மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்டு பின்பு விமானம் மூலம் இந்தியா வருகின்றனர். இதிலும் குறிப்பாக புக்கரெஸ்ட், ருமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட பகுதிகளின் மூலமாக இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்படுகின்றனர்.







