இலங்கைக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கிரிக்கெட் போட்டியில் 3க்கு0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்…

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கிரிக்கெட் போட்டியில் 3க்கு0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வெளியேறினர். தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த அடுத்து வந்த, அசலங்கா (4), ஜரித் லியநாகே (9) அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறியது.

தொடர்ந்து வந்த அணியின் கேப்டன் தசுன் சணகா பொறுப்பாக ஆடி 38 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் தினேஷ் சண்டிமால் 25 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இறுதியில், இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இஷான் கிஷனுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் 5 ரன்களில் வெளியேறினார்.

சஞ்சு சாம்சன்(18), தீபக் ஹூடா(21) வெங்கடேஷ் அய்யர்(5) ஆகியோர் பெரிதும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினாலும், ஸ்ரேயஸ் அய்யர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இலங்கை அணி இந்தியாவுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4-ஆம் தேதி மொகாலியில் துவங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.