ஹரியானாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று தொடங்கிய இந்த நடைபயணத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார். இதில் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இதனால் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்ற இயலாத சூழல் ஏற்படுமானால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.