சீனாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் உள்ள தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்-7 வகை கொரோனா வைரஸ் பரவல் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும், லட்சக்கணக்கான முதியவர்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், மருத்துவமனைகளில் பணிபுரியும் பலருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் 12.5 மில்லியன் பேர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மார்ச் மாதத்தில் உச்சமடையும் கொரோனா பரவலால் நாள் ஒன்றுக்கு 4.2 மில்லியன் பேர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியில்லாததால் வரவேற்பரை மற்றும் சக்கர நாற்காலியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கார்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோளாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனையில் வளாகத்தில் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கின்றன.