கத்தி, மிளகாய் பொடியுடன் திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமானுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2023 ஜனவரி 24 தேதி கலீல் ரகுமான் கத்தியை வைத்து வங்கியின் மேலாளரை மிரட்டி வங்கியின் லாக்கர்ஸ் அறையின் சாவியை தரும்படி கூறியுள்ளார். அதே வங்கியில் வேலை பார்த்த கிளர்க் கருப்பசாமி கலீல் ரகுமான் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டு மேலாளரை காப்பாற்றியுள்ளார் மேலும் கலீல் ரகுமான் தனி அறையில் வைத்து அடைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் டவுன் மேற்கு காவல் நிலையம் காவல்துறையினர் கல்லில் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தி, பேப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கலீல் ரகுமான் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், மனுதாரர் மீது இதற்கு முன்பு வழக்குகள் எதுவும் பதிவு செய்யபடவில்லை ஆனால் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய குற்றம் எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் சில மனநல பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளார். எனவே ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அண்மைச் செய்தி : நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்
மனுதாரர் தினமும் காலை 10:30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஜாமினில் வெளியே இருக்கும் காலத்தில் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது. மனுதாரர் நிபந்தனையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் புதிய வழக்கு பதிவு செய்து மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.







