நியூயார்க் காவல்துறையில் உயர்ந்த பதவியை பெற்ற தெற்காசிய பெண்மணி என்ற பெருமையை இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் பெற்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், குயின்ஸ் நகரில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சவுத் ரிச்மண்ட் ஹில்லில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருபவர் பிரதிமா புல்லர் மால்டோனாடோ. நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரதிமா, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். தனது 9வது வயது வரை அங்கு வசித்து வந்த இவர், பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இவரது தந்தை டாக்சி ஓட்டுநராக இருந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு அவர் காலமான நிலையில், குடும்ப பாரத்தை சுமப்பதற்காக, நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்துள்ளார். கடின உழைப்பால் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு, கடந்த மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண்மணி என்ற பெருமையை பிரதிமா பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரதிமா, “இது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு. எனது சமூகத்திற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும், நம்மை தினமும் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும், சிறந்த, நேர்மறையான முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால், சட்டத்தின் மீதான அவர்களின் கண்ணோட்டத்தை இது மாற்றும் என்று நம்புகிறேன்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 – ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள்!!
இதை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். மறைந்த என்னுடைய தந்தையும் என்னை நினைத்து பெருமைப்படுவார். கடினமாக உழைத்தால் நீங்களும் வெற்றிப் படிக்கட்டில் ஏறலாம் என்பதை மற்ற ஆசிய, தெற்காசியப் பெண்களுக்கு கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.







