சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக உண்டான உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இருளாயி, அய்யம்மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் குமரேசன், சுந்தர்ராஜன் மற்றும் அய்யம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருளாயி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல்நிலைய போலீசார், பட்டாசு ஆலை போர்ட்மேன் காளியப்பன் என்பவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







