போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்தாண்டு உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்தது. இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இருந்த வந்த போர் பதற்றம் அதிகரித்தபடி இருந்தது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பலமுறை பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், சமரசம் உண்டாகவில்லை. இதன் பிரச்சனை தொடர்ந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, உக்ரைனை கைப்பற்றும் வகையில் அதன் மீது போர்தொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியது. இதனையடுத்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என பைடன் எச்சரித்திருந்தார்.
இருப்பினும் அதை கண்டுக்கொள்ளாமல் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் மீது ரஷியா வருகிற 16-ந் தேதி படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து, அங்கு போர் பதற்றம் நீடித்து வந்ததால் அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். மேலும், உக்ரைனில் உள்ள தூதரகத்தை காலி செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது.
இந்த கடுமையான சூழல் குறித்து ஐ.நா-வும், ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் கவலை தெரிவித்திருந்தனர். நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டவர்கள் உக்ரைனுக்குச் செல்ல தடை விதித்திருந்தனர். அதோடு, ஏற்கனவே, உக்ரைன் சென்றவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்றும் அந்நாடுகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனிலிருந்து வெளியேறும்படி தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருந்ததை அடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் உக்ரைனில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேவையின்றி இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களது பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், நாளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், அங்கு மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.







