ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். படம் வெளியான அந்த சமயத்திலேயே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்த நிலையில், 2-ம் பாகத்தினையும் அவரே கமல்ஹாசனை வைத்தே ஆரம்பித்தார். படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாட்களிலேயே விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் கமல் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைப் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
லைகா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.மேலும், சில மாதங்களாக இப்படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக கூறப்பட்டுவந்தது. ஆனால், இதுகுறித்து நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கமல்ஹாசன் ”KH233” படத்திற்காக நடிகர் கமல் தயாராகும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனைதொடர்ந்து படத்தின் விஎஃபெக்ஸ் பணி நடைபெறும் புகைப்படம் ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டார். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் திட்டமிட்டபடி இப்படம் திரைக்கு வர வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இயக்குநர் ஷங்கரும், நடிகர் கமல்ஹாசனும் பேசிக்கொள்ளும்படி அமைந்துள்ளது. வீடியோவின் இறுதியில் டப்பிங் பணிகள் நடைபெறுவதாக அறிவித்துள்ளது படக்குழு.








