நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் 2-வது அலை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் அதிகளவு உள்ளது என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் 2-வது அலையின் காரணமாகப் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உதவிகள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் குறித்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் பல்ராம் பார்கவா, “கொரோனா முதல் அலையின் பாதிப்பை காட்டிலும் 2-வது அலையின் பாதிப்பு குறைவாக உள்ளது. முதல் அலை கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு இணைப்பு வலி, தசை வலி, வாசனை, சுவை தெரியாமல் போவது, தொண்டை வறட்சி போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் இந்த 2-வது கொரோனா அலை தாக்கத்தின்போது பெரும்பாலும் தெரியவில்லை. அதேபோல் இந்த 2-வது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமானவர்களுக்கு மூச்சு திணறல் பிரச்சினை அதிகளவு உள்ளது.
அதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலேனருக்கு அறிகுறிகள் இல்லை. பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த உருமாறிய கொரோனா அதிகளவு பரவும் தன்மை கொண்டது” என அவர் கூறியுள்ளார்.







