முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?


எல்.ரேணுகாதேவி

கட்டுரையாளர்

இந்திய பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்துவருகின்றனர். ஆழ்கடல் முதல் அண்டவெளி வரை பெண்களின் பங்களிப்பைக் காணமுடிகிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளாக மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தில் வளர்ந்துவரும் தொழில்துறை, அரசியல் களத்திலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது காலத்தின் தேவையாகும்.

வரலாற்றில் பெண்கள் வீர மங்கைகளாகவும் சமூக மாற்றத்தின் முக்கிய காரணியாகவும் இருந்துள்ளனர். பெண் என்ற பாலின அடையாளத்தின் காரணமாகவே அவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்றும் வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. ஆனாலும் இந்திய சமூகத்தில் எடுத்துக்காட்டாக சில பெண்கள் மேற்கொள்ளும் அசாத்திய சாதனைகள் சமூகத்தில் சிறகுகள் முடக்கப்பட்ட பெரும்பான்மை பெண்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமைகிறது.

சமீபத்தில்கூட நாசா விண்வெளி முகமை பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை வெற்றிகரமான கடந்த பிப்ரவரி செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இந்த விண்கலம் செவ்வாயில் காலூன்றியதில் மிகப்பெரிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகன் ஆவார். நாசாவில் ‘மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவராக உள்ளார் சுவாதி மோகன்.

சரோஜினி நாயுடு, கேப்டன் லட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி

2021-யில் சுவாதி மோகன் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் சுதந்திர வரலாற்றில் ஜான்சிராணி, வேலூ நாச்சியார், சரோஜினி நாயுடு, கேப்டன் லட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரில் தொடங்கி சுதந்திர இந்தியாவில் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கால்வாயை கடந்த புலா சௌத்ரி, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பச்சேந்த்ரி பால், அண்டார்டிக்கா கண்டத்தை அடைந்த முதல் இந்திய பெண் அதிதி பந்த், இந்திய கடற்படையின் முதல் கேப்டன் ராதிகா மேனன், இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் டயானா எடுல்ஜி, இந்திய ஏவுகணைத் திட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்திய டெஸ்ஸி தாமஸ், உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற கமலா சோஹோனி என இவர்களுடைய வரிசையில் பி.டி.உஷா, மித்தாலி ராஜ், இந்திரா நூயி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் மீரா குல்கர்னி, எழுத்தாளர் அருந்ததி ராய், மேரி கோம், முதல் போர் விமானி அவானி சத்தூர்வேதி என சோதனைகளைச் சாதனைகளாகப் பெண்கள் கடந்த வந்த பாதையும் எதிர்கொண்ட சவால்களும் ஏராளம்.

நூற்றுக்கணக்கான துறைகள் வளர்ச்சி அடைந்துவரும் இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே பெண்களின் பங்களிப்பு உள்ளது. அதுவே பெண்கள் நாட்டில் முன்னேறிவிட்டார்கள் என்ற மாய பிம்பத்தை உருவாக்குகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பாலினப் பாகுபாடு விகிதத்தில் இந்தியா 112-வது இடத்திலிருந்து 140-வது இடத்திற்கு சரிந்துள்ளது. தெற்காசியாவில் பாலின பாகுபாடு விகிதத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 24 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைந்துள்ளது. உலகளவில் மிக குறைந்த எண்ணிக்கையில் இந்திய பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது. நாட்டில் 5-ல் 4 பெண்கள் அலுவலக வேலைகளில் ஈடுபடாமல் உள்ளனர். அலுவலக தலைமை பொறுப்புகளில் 14 சதவீதத்திலிருந்து பெண்களின் பங்களிப்பு 8.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கல்வி துறையில் மூன்றில் ஒரு பெண் கல்வி கற்க முடியாமல் உள்ளார்.

மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு ஊக்கப்படுத்துவதன் மூலம் நாட்டில் 60.50 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் 2025-யில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 18 சதவீதம் உயரம் அதாவது 770 பில்லியன் டாலர் வரை உயரும் என கூறியுள்ளனர். அதேபோல் கூகிள் மற்றும் பைன் & கம்பெனி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பெண்களுடைய வேலையின்மை 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என தெரிவத்திதுள்ளது.

குறிப்பாக நாட்டில் அரசியல் தளத்தில் பெண்களுடைய பங்களிப்பு என்பது கடந்த 2019-ம் ஆண்டு 23.1% இருந்த நிலையில் தற்போது 2021-ம் ஆண்டு 9.1% குறைந்துள்ளது. நாட்டில் தற்போதுவரை பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதன்காரணமாக உள்ளாட்சித் துறை,மாநில சட்டப்பேரவைகளில் பெண்களின் அரசியல் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இதன்காரணமாகதான் 21-ம் நூற்றாண்டிலும் பெண்களின் வெற்றியை ‘முதல் பெண்’ என்ற அடைமொழியுடன் அழைத்துவருகிறோம். பெண்களுடைய வெற்றிகள், சாதனைகள் எடுத்துக்காட்டாக உள்ள அதேநேரத்தில் அதுவே விஷசமான நிகழ்வாக அத்தி பூத் சம்பவமாக மாறும் சூழல் மாறவேண்டும்.

பெண்களின் பங்களிப்பை அரசியல், ஆட்சி அதிகாரம் மற்றும் தொழில்துறையில் அதிகாரம் அளிப்பதன் மூலம் சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நம்தேசம் வளர்ந்து செழிக்க வேண்டுமென்றால், நாம் நிச்சயமாக பெண்களின் முன்னேற்றத்தைக் கால மாற்றத்திற்கு ஏற்ப முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவேண்டியது அவசியமாகும்.

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar

மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை – எடியூரப்பா

Jeba Arul Robinson

23 மணி நேர பயணம்: சென்னை வந்தார் சசிகலா

Nandhakumar