2047இல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். உலகில் உள்ள அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு பெருமைக்குரியது. தமிழகத்தில் 4 லட்சம் தேசிய மாணவர் படையினர் உள்ளனர். தேசிய மாணவர் படையின் மூலமாக கூட்டு மனப்பான்மை என்பது வளரும்.
வாழ்வில் முடியாதது என்பது எதுவும் இல்லை. சவால்களை எதிர்கொள்ள தயக்கம் கொள்ள கூடாது. அந்த சவாலில் தோல்வி அடைந்தாலும் அதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். சவால்களை சந்திப்பது மூலமே வளர முடியும். 2047ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறும். இந்த சவாலை நோக்கித்தான் இந்தியா பயணம் செய்ய உள்ளது. இதில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் நீங்கள் வளர வேண்டும்.
உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கி வருகின்றனர். உலக நாடுகளில் உள்ள பிரச்னைகளை எப்படி சரிசெய்வது என்பது குறித்து இந்தியாவின் பார்வையை எதிர்பார்த்து வருகின்றனர். G20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் மூலம் மட்டுமே உலக நாடுகளின் ஒட்டுமொத்த GDP-யில் 85% வருமானம் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது.
ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை எதிர்பார்த்து வரும் சூழலில் அதனை நாம் ஈடு செய்ய வேண்டும். இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக யாரும் இன்று பார்க்கவில்லை,வளர்ந்த நாடாக பார்க்கின்றனர். உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிளும் இந்தியாவின் பங்கு முக்கியமாக உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த உலகிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு உள்ள சூழலில் இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளது.
பெரிய அளவில் கனவு காணுங்கள், எதை செய்தாலும் அதில் சிறந்து விளங்குங்கள் அப்படி தொடர்ந்து பயணம் செய்தால் யாராலும் உங்களை தடுக்க முடியாது என்றார்.
-ம.பவித்ரா








