20247 ஆம் ஆண்டு, இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும் என்றும், அதற்கான இலக்கை நோக்கி நமது நாடு பயணித்து வருகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “2047ல் உலகளவில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். கடல் வள வர்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். அதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் பெரும் கனவுடன் இருந்தால், 2047ல் நமது நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும். முயற்சிகள் செய்வதற்கான பொன்னான நேரம் இது.
இதையும் படியுங்கள் : ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இதுதான் காரணமா? – இந்தியாவுடன் முடிச்சு போடும் ஜோ பைடன்..!
இந்திய நாடு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 24 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. கடல்சார் பொருளாதாரம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. பெரிதாக கனவு காணுங்கள். அதற்காக கடுமையாக பாடுபடுங்கள். 2047ல் இந்திய தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்போது நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.







