ஐபிசி-யின் பெயரை மாற்றும் புதிய மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட காலனியச் சட்டங்களை நீக்கிவிட்டு புதிய நம்பிக்கையுடன் புதிய சகாப்தத்துக்குள் நுழைகிறோம்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ந்து வருகிறது. விரைவில் அந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும்.
புதிய மசோதாக்கள் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன”
இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
ஐபிஎஸ் தேர்வானவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பெண்களின் முன்னேற்றத்துடன் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.







