டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று துபாயில் மோதுகின்றன.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக ஆடி வருகின்றன. குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ் அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந் நிலையில் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இது அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளான போட்டி என்பதால் கண்டிப்பாக அனல் பறக்கும் என்கிறார்கள்.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என பேட்டிங்கில் அதிரடி காட்டும் வீரர்களும், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று திறமையான பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில், இந்திய வீரர்கள் இதே மைதானங்களில் தான் விளையாடினார்கள் என்பதால், அந்த அனுபவம் உதவும். அத்துடன் முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராக இருப்பது அணிக்கு மன வலிமையை வழங்கும்.
பாகிஸ்தான் அணியை, கணிக்க முடியாத அணி என்கிறார்கள். அது எப்போது எகிறும் எப்போது உதிறும் என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த அணியில், கேப்டன் பாபர் அசாம் , விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான் ஆகியோர் சிறந்த ஃபாமில் உள்ளனர். மிடில் ஆர்டரில் முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு கைக்கொடுக்கும்.
பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ரவுப் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுகட்டுவதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் தோல்வி அடைந்து வருவதால் இந்த முறையும் அது தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச டி-20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் ஏழு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.