நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று 45% அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 17,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைவிட 45% அதிகமாகும். உயிரிழப்புகளை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,25,020 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல 15,208 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்பு, 4,34,07,046 ஆக உயர்ந்துள்ள நிலையில் 4,27,87,606 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 94,420 பேர் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,844 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பை பொறுத்த அளவில் அதிகப்பட்சமாக 79,62,666 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,493 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கேரளா 66,24,064 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,378 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவும், தமிழ்நாடும் உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 1,472 பேர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








