சமீபத்தில் கத்தார் நாட்டில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்ற நிலையில், ஃபிஃபா அமைப்பு கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கால்பந்து என்றாலே, அது உள்ளூர் போட்டியானாலும், உலக கோப்பை போட்டியானாலும், அதிக வரவேற்பைப் பெறும். சமீபத்தில் கத்தார் நாட்டில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணியை வென்று உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது.
இதற்கு முன்பாக 1978 மற்றும் 1986-ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, தற்போது 3-வது முறையாக மகுடம் சூடியுள்ளது. மேலும் இரண்டு ஃபிஃபா ‘கோல்டன் பால்’ விருதுகளை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஃபிஃபா அமைப்பு கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படியலில் முதல் இடத்தில் பிரேசில் அணி இடம் பெற்றுள்ளது. நடப்பாண்டு சாம்பியன் அர்ஜெண்டினா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக கோப்பை காலிறுதியிலேயே பிரேசில் அணி ஆட்டம் இழந்து வெளியேறிய போதும் பிரேசில் அணியே தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துள்ளது.
இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியிடம் வீழ்ந்த பிரான்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் பெல்ஜியம் அணி, 4 இடத்திலும் காலிறுதியில் வீழ்ந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் 5. 6வது இடங்களைப் பிடித்துள்ளன.
குறிப்பாக இந்த ஃபிஃபா தரவரிசையின்படி, இந்தியா 106வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 13வது, மெக்சிகோ 15 வது ஆசிய அணிகளான ஜப்பான் 20 வது, ஆஸ்திரேலியா 27 வது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசை முறை 1992ல் தொடங்கியது முதல், பெரிய கட்டத்திற்குச் செல்லும் பெரும்பாலான அணிகள் தரவரிசை 50 க்கு கீழ் உள்ளன. ஃபிஃபாவின் குறைபாடுள்ள தரவரிசை முறையை நாம் ஒதுக்கி வைத்தாலும், இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்காக அரசும் கால்பந்து விளையாட்டு அமைப்புகளும் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.








