தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் இன்று திறந்துவைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இங்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட உள்ளது.கொரோனாவை ஒழிக்கும் நாளே தமிழகத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் மகிழ்ச்சியான நாள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் 50 சித்த மருத்துவமனைகளை தொடங்கியுள்ளோம், கடந்த ஆட்சியில் 13 சித்த மருத்துவமனைகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன, சித்த வைத்தியம் கோருவோருக்கு வைத்தியம் வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
மேலும், திமுக அரசில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக நடைபெறுகிறது, திருக்கோயில் சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக காட்டுகிறோம் என்ற அமைச்சர், கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை, இதில் அரசியல் செய்யவில்லை என்று கூறினார்.







