இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.   ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.…

டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் “4” சுற்று போட்டிகளுக்கு அணிகள் தயாராகியுள்ளன. முன்னதாக நடந்த லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி முதலாவது அணியாக சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறியது.

 

இதேபோல், ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்தியா ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன்பிறகு, வங்க தேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணியும், ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணிகளும் சூப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று 2-வது முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் அதே துபாய் மைதானத்தில் நடக்கிறது.

முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உத்திட்டார். இதேபோல், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா 35 ரன்கள் எடுத்து இருந்தனர். பந்துவீச்சில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

ஏற்கனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். அதேவேளையில் பாகிஸ்தான் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவே தீவிரம் காட்டும் என்றும், இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.