சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தோ – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த கூட்டமைப்பில், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேஷியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
இந்திய பெருக்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளுக்கான கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இதற்கான தொடக்கவிழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
இந்தோ – பசிபிக் கூட்டமைப்பை தொடக்கி வைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை இந்தோ – பசிபிக் கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளளதாகக் குறிப்பிட்டார். இந்த புதிய முயற்சியின் மூலம், இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒருங்கிணைந்ததாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் உள்ள இந்தோ – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் வளர்ச்சிக்காக இந்தியா பாடுபடும் என குறிப்பிட்டார். சர்வதேச வர்த்தகம் தடையின்றி இருக்க, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, காலவரையறை ஆகிய மூன்றும் மிகவும் முக்கியம் என கூறிய நரேந்திர மோடி, இந்த அடிப்படையில் இந்தோ – பசிபிக் பிராந்த்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் புதிய எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்த கூட்டமைப்பு மிகவும் அவசியம் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.









