இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டதால் வளர்ச்சி பெற்றுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனை ஆணையத்தின் 7 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், நமது பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக வங்கதேசம் திகழ்வதாகக் குறிப்பிட்டார். கொரோனா தொற்றை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வெற்றி கண்டுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், தடுப்பூசி, மருந்து என பல வகைகளில் இந்தியா வங்கதேசத்திற்கு உதவியதாகத் தெரிவித்தார்.
இரு தரப்பு உறவை புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இணைய குற்றங்களை தடுப்பது, ரயில் சேவையில் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவையும் இதில் அடங்கும் என்றார்.
இதையடுத்துப் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென், தங்களுக்கு மிக முக்கியமான அண்டை நாடு இந்தியா என்றார். இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் வங்கதேசம் பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த அப்துல் மோமென், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டதாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இருப்பதாகக் குறிப்பிட்டார்.