குருத்வாரா குண்டுவெடிப்பு: கோழைத்தனமான தாக்குதல் – ஜெய்சங்கர்

காபூலில் உள்ள குருத்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவின் வாயிற்பகுதியில் இன்று அதிகாலை வெடிகுண்டுச்…

காபூலில் உள்ள குருத்வாரா கார்டே பர்வான் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவின் வாயிற்பகுதியில் இன்று அதிகாலை வெடிகுண்டுச் சப்தம் கேட்டுள்ளது. இந்த தாக்குதலில் குருத்வாராவின் காவலர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், வளாகத்துக்குள் மற்றொரு வெடிகுண்டுச் சப்தம் கேட்டுள்ளது. பின்னர், குருத்வாராவில் உள்ள சில கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. மேலும், துப்பாக்கிச்சூடு சப்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்தத் தாக்குதலில் சீக்கிய பக்தர் ஒருவரும், குருத்வாரா காவலாளியும் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பக்தர்கள் பலரும் வழிபடுவதற்காக வளாகத்துக்குள் இருந்துள்ளனர். தாக்குதலில் இருந்து சிலர் தப்பித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், குருத்வாராவிற்குள் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/DrSJaishankar/status/1538041342798229504?t=n_7nj-URMU8ITg5PPrc3Eg&s=08

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், குருத்வாரா கார்டே பர்வான் மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததில் இருந்து நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஆப்கானில் உள்ள சீக்கிய சமூக மக்களின் நலன் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.