இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது என பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மணீஷ் சிசோடியா கைதையொட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து மீண்டும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது : இந்தியா ஜனநாயக நாடு என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம். இந்தியாவில் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா ஜனநாயகத்திலிர்ருந்து மாறி வருகிறது.
தில்லியில் வழங்கப்பட்டுள்ள கல்வி வளர்ச்சியின் மூலம் உலக நாடுகளால் நன்கு அறியப்பட்டவர் மணீஷ் சிசோடியா. அவரது கைது உலக நாடுகளை இந்தியாவின் ஜனநாயக மதிப்பின் மீது சந்தேகிக்க செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணையானது அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு மென்மையாக நடத்தப்படுகிறது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி : ”இந்தக் கூட்டணிக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்” – மனம் திறந்த அல்லு அர்ஜூன்
இந்த கடிதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா, தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.







