ஒலிம்பிக் ஹாக்கியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. குரூப் ‘ஏ’வில் 2ம் இடம் பிடித்த இந்திய அணியும், குரூப் ‘பி’யில் 3ம் இடம் பிடித்த பிரிட்டன் அணியும் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்தியது. இந்திய அணியின் தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.
தொடர்ந்து 2வது பாதியில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 2வது கோல் அடிக்கும் பிரிட்டன் அணியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்ட இந்திய அணி, ஆட்டம் முடியும் தருவாயில் மேலும் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் ஹர்திக் அடித்த கோலால் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
After an exciting game of Hockey, #TeamIndia emerges winner in the quarterfinal at the #Tokyo2020 to march into the semifinal. This is the first time since 1980, India will finish in the last 4, & will play an Olympics semifinal for the first time since 1972.#Cheer4India pic.twitter.com/AbR6Hzv50q
— SAI Media (@Media_SAI) August 1, 2021
1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. ஆனால், அப்போது அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவில்லை. நேரடியாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றிருந்தது. அதற்கு முன்னதாக, 1972ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய அணி விளையாடியிருந்தது. தற்போது மீண்டும் அரையிறுதிப்போட்டியில்விளையாடுவதன் மூலம், 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரையிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி முன்னேறியுள்ளது. ஆகஸ்டு 3ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.









