ஆசிய கோப்பை 2022 டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை 2022 டி20 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து அசத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா 13 பந்துகளில் 21 ரன்களும், கே.எல்.ராகுல் 39 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் 98 ரன்கள் குவித்து ஹாங்காங்கை கதிகலங்கச் செய்தனர். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஹாங்காங் அணியின் பாபர் ஹயாத் 41 ரன்களும், கிஞ்சித் ஷா 30 ரன்களும், செஷான் அலி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி ஆசிய கோப்பை 2022 டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.







