வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 238 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. கடந்த 6-ம் தேதி இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு முதலாவது ஒருநாள் போட்டி நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் 6 விக்கெட்டுள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில், தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோகித் சர்மா 5 ரன்களிலும், பண்ட் 18 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இவர்களை அடுத்து வந்த விராட் கோலியும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் வந்த கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். இந்திய அணி 134 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற சூர்யகுமார் ரன் சேர்ப்பில் ஈடுபட்டு 64 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்சாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.