தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற தபால் நிலையங்களில் புதிய கணக்கு துவக்க வேண்டுமென வெளியான தகவலால் தேனி மாவட்டத்தில் தபால் நிலையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் எனவும், வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உரிமை தொகை பெறுவதற்கு
விதிமுறைகளை வகுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், தபால் நிலையத்தில் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாடு அரசின் 1000 உரிமை தொகையினை பெற முடியுமென தகவல் வெளியானது. இதனால் தேனி தபால் நிலையத்தில் பெண்கள் கூட்டம் குவிந்தது. தேனி அருகில் உள்ள ஸ்ரீரங்கபுர கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில், புதியதாக வங்கி கணக்கு துவக்க காலையில் இருந்தே பெண்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், புதியதாக வங்கி கணக்கு துவக்க 200 ரூபாய், ஆதார் கார்டு மற்றும்
கைரேகை வைத்து அவர்களுக்கு ஒரு ஏ.டி.எம் கார்டு வழங்கப்படுகிறது. இந்த,
ஏ.டி.எம் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே 1000 ரூபாய் கிடைக்குமென ,
சிலர் கூறியதால் பெண்கள் ஆர்வமுடன் தபால் நிலைய வாசலில் காத்துக் கிடந்தனர்.
—கு.பாலமுருகன்







