கஜகஸ்தானில் நடைபெறவுள்ள வாலிபால் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு அரசு உதவி வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி வீராங்கனை சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த சங்கீதா அரசு சட்டக் கல்லூரியில்
மூன்றாமாண்டு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான
சங்கீதா, மாநில அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட போட்டிகளில்
பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், சங்கீதா இந்திய சக்கர நாற்காலி
கூடைப்பந்தாட்ட பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
மேலும், ஜூலை 3 முதல் 8 வரைக்கு கஜகஸ்தானில் நடைபெறும் “வாலிபால்
ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில்” பங்கேற்க ரூ.2.25 லட்சம் கட்ட வேண்டுமென, இந்திய பாரா ஒலிம்பிக் வாலிபால் பெடரேஷன் கடிதம் அனுப்பி உள்ளது. இதில், 50 சதவீத பணத்தை வரும் 28-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென, கூறியுள்ளது.
இதனால், மாற்றுத்திறனாளி வீராங்கனை சங்கீதா பணம் செலுத்த முடியாத சூழலில் இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த சங்கீதா, விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட நான்
கடுமையான பயிற்சிக்கு பின் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதித்தேன்.மேலும, தற்போது கஜகஸ்தானில் நடைபெறும் வாலிபால் ஏசியன் சாம்பியன் சிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளேன்.
ஆனால் , விமான டிக்கெட், விசா, நுழைவு கட்டணம் என ரூ.2.25 லட்சம் கட்ட அறிவுறுத்தி உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னால் பணம் கட்ட இயலவில்லை. ஆகவே, தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும்” என கூறினார்.
—கு.பாலமுருகன்







