நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு 15 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வீடுடன் கூடிய ஒரு ஏக்கர் நிலத்திற்கு 78 லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில கையப்படுத்தும் பணி தொடர்பான மக்களின் குறைகளை அறிய, மக்கள் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் எனவும், நிலம் கையப்படுத்தப்படும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனம் ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், நிலம் கையப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிப்ளமோ – ஐடி போன்ற தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 4 ஆண்டுகளில் சுமார் 500 பேருக்கு நிரந்தர வேலை வழங்க வழிவகை செய்யப்படும் எனவும், அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







