புகைப்பழக்கத்தால் தான் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் புகைப்பழக்கத்தை கைவிட்டதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சேவ் யங் ஹார்ட்ஸ் எனும் தலைப்பில் இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சார
நோக்கத்தோடு, இதயத் திரைப்பட விழா குறும்பட போட்டி நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இதயம் மட்டும் எப்போதும் பிறப்பதற்கு முன்னரே துடிக்கத் தொடங்கி விடுகிறது. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது மட்டுமே பிட்னெஸ் கிடையாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாளுக்கு 70 சிகரெட் பிடிப்பேன். இயக்குநராக இருக்கும் போது 150 சிகரெட் வரை பிடிப்பேன்.
இதனால் படங்களில் 100% கவனம் செலுத்த முடியவில்லை. ஓடியாடி வேலை செய்ய முடியாமல் போன பிறகே சிகரெட் பிடிப்பதை விட்டேன். இன்றைய சூழலில் உணவு பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. வெள்ளை சக்கரை தான் நம் உடலில் எடுத்துக்கொள்ளும் முதல் போதை வஸ்து” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன், “தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அதிகளவில் ஏற்படுகிறது. அதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான். ஆனால் சமூகத்தில் அதைவிட அதிகமாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மேலும் சினிமாக்களில் அந்த காட்சிகள் தவிர்க்கப்படுவதால் மட்டும் போதை பழக்கங்களை கற்றுக்கொள்வது குறையும் என்று கூறமுடியாது. என்னுடைய படங்களில் கதாநாயகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துள்ளேன். விடுதலை படத்தின் அப்டேட் இப்போது கிடையாது. அப்புறம் தான்” என்று தெரிவித்தார்.







