மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலை சந்திப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் குழந்தைகள் (யாசகம் ) பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை மாநகர் மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் பகுதியில் குழந்தைகளை வைத்து அதிக அளவில் பிச்சை எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நியூஸ்7 தமிழ்
சிறப்பு செய்தியாளர் மருதுபாண்டி எழுப்பிய கேள்விக்கு, மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அளித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2018 ஆண்டு 4 குழந்தைகளும், 2020 ஆண்டு 15 குழந்தைகளும், 2021 ஆண்டு 38 குழந்தைகளும், 2022 ஆண்டு 56 குழந்தைகளும், என மொத்தம் 113 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், மேலும் மதுரை மாநகர் பகுதியில் மட்டும் கடந்த 2018 முதல் 2022 வரை குழந்தையை கடத்தி விற்க முயன்ற போது 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், சுமார் 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாநகர் பகுதியில் அதிக அளவு பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மூலம் சிறப்பு குழு நியமித்து, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








