ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ் ஜி சார்லஸ் இயக்கியுள்ள படம் சொப்பன சுந்தரி. இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்துள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு பிறகு ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நகைச்சுவையை மையமாக கொண்டு குடும்பத்தில் நிகழும் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
சொப்பன சுந்தரி என்ற தலைப்பை கேட்டதும் பலருக்கு நினைவுக்கு வருவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் நகைச்சுவை தான். கவுண்டமணி, செந்திலோட சொப்பன சுந்தரி நகைச்சுவை இப்போதுவரை மிகவும் பிரபலம். அந்தக் காலத்தில் இருந்து இந்த பெயரும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
வறுமையில் வாடிவரும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற ஒரு நகைக்கடையில் வேலை செய்து வரும் சாதாரண பெண் தான் அகல்யா (ஐஷ்வர்யா ராஜேஷ்). உடல்நிலை சரியில்லாத தந்தை, வாய் பேச முடியாத அக்கா என அந்த வீட்டின் எல்லா கஷ்டங்களையும் பொறுப்புகளையும் அவர் தான் பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஐஷ்வர்யா ராஜேஷ் வேலை செய்து வரும் நகைக்கடையில் அதிக அளவில் நகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கொடுக்க நகைக்கடை மேலாளர் முடிவு செய்வார்.
அப்படி முதல் பரிசாக ஐஷ்வர்யா ராஜேஷ்க்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாக அளிக்கப்படும். தினசரி தேவைகளுக்கு கூட கஷ்டப்படும் ஐஷ்வர்யா ராஜேஷ் குடும்பம் தங்களுக்கு கார் பரிசு கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இது ஒருபுறம் இருக்க வாய் பேச முடியாத தனது அக்காவுக்கு அந்த காரை சீதனமாக கொடுத்து திருமணம் நடத்த ஐஷ்வர்யா ராஜேஷ் முடிவு செய்வார்.
ஆனால் இங்கு தான் பிரச்சனைகள் தொடங்கும். அந்த கார் தனக்கு தான் சொந்தம் என ஐஷ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரன் சண்டைக்கு வர காவல்நிலையம் வரை பிரச்சனை வெடிக்கும். பரிசாக கிடைத்த கார் யாருக்கு சொந்தமானது. ஐஷ்வர்யா ராஜேஷ் நினைத்தது நடந்ததா இல்லையா என்பது தான் சொப்பன சுந்தரி படத்தின் கதை.
கரகாட்டக்காரன் படத்தில் வரும் நகைச்சுவை போல ஒரு காரை வைத்து ஒட்டுமொத்த படத்தையும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சார்லஸ். இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது படத்தின் நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் தான். எளிமையான கதை தான் என்றாலும் அந்த கதைக்கு ஏற்ப மிகவும் சாதாரண ஒரு பெண்ணாகவே அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ஐஷ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பும், எதார்த்தமான சண்டைகளும் படத்திலும் வலுவை சேர்த்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளிலும், எமோஷன் காட்சிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படத்திற்கு லட்சுமி பிரியா மற்றும் தீபா தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். குறிப்பாக ஐஷ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து அவர்கள் செய்யும் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. 1994 இல் வெளியான மகளிர் மட்டும் படத்தை போல பெண்களின் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது.
மைம் கோபி மற்றும் கருணாகரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதே போல காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சுனில் குமார் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை. அதே போல பின்னணி இசையும் பெரிய அளவில் இல்லை.
படத்தின் கதையும் திரைக்கதை சென்ற விதமும் பெரிய அளவில் குறை சொல்ல முடியாத அளவிற்கு மாற்றியது. படத்தின் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் திரைக்கதையை சற்று விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் இதற்கு முன்பு எடுத்த லாக்கப் படத்தை போலவே இந்த படத்திலும் சில டிவிட்ஸ் மற்றும் எதிர்பார்க்காத சில தருணங்கள் படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறது. சின்ன சின்ன குறைகளை தவிர்த்து பார்த்தால் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படமாகவே உருவாகியுள்ளது.







