சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி பண்டிகை அன்று அதிகப்படியான பட்டாசுகள் வெடித்த காரணத்தால், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும், தீபாவளி மற்றும்…

தீபாவளி பண்டிகை அன்று அதிகப்படியான பட்டாசுகள் வெடித்த காரணத்தால், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும், தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த 6 நாட்கள் என மொத்தம் 14 நாட்களுக்கான சுற்றுப்புற காற்று மாசு காரணிகளை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அதே போல், ஒலி மாசுபாட்டின் அளவையும் கண்காணித்து வருகிறது.

அதன்படி சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட, பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார் பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் தீபாவளி பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசுபாடு குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

இதில், கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகையன்று, காற்று மற்றும் ஒலி மாசுபாடு கடுமையாக அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாட்டை பொறுத்த வரை, தீபாவளி அன்று சென்னையில், குறைந்தபட்ச அளவு
345 ஆக பெசன்ட் நகர் பகுதியில் பதிவாகியுள்ளது. அதிகபட்ச காற்று மாசு அளவு 786 ஆக சவுகார்பேட்டை பகுதியில் பதிவாகியுள்ளது. ஒலி மாசுபாட்டை பொறுத்தவரை குறைந்த பட்சம் பெசன்ட் நகரில் 66 டெசிபல் அளவாகவும், அதிகபட்சம் திருவொற்றியூரில் 79.7 டெசிபல் ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த அளவுகள் தேசிய மாசுபாட்டின் வரையறைகளை விட அதிகமானவை என்பது மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை விட அதிகமானது என்பது கவனத்தில் கொள்ளதக்கதாக அமைந்துள்ளது. சுற்றுப்புற மாசுபாடு அளவு கடுமையாக அதிகரித்ததற்கு பல்வேறு காரணிகளாக காற்றில் காணப்பட்ட அதிக ஈரத்தன்மை மற்றும் காற்றின் மிக குறைந்த வேகமும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், மிக முக்கிய காரணியாக, தீபாவளி அன்று, வெடிக்கப்பட்ட பட்டாசு மற்றும் வான வேடிக்கைகளுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.