ஆதாரம் இல்லாமல் தங்கள் கணவனை குடிகாரன், அதீத பெண்ணாசை கொண்டவன் என முத்திரை குத்துவது கொடுமைக்கு சமமானது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுடனான திருமணத்தை ரத்து செய்து, புனே குடும்ப நீதிமன்றம் கடந்த நவம்பர் 2005ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணையை எதிர்த்து, 50 வயது பெண் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி இறந்துபோன நிலையில், நிலுவையில் இருந்த இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பெண் தனது கணவர் மீது பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மன வேதனையை ஏற்படுத்தியதாக இறந்தவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம், ”தனது சொந்த அறிக்கையைத் தவிர, மனுதாரர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஆதாரம் இல்லாமல் தங்கள் கணவனை குடிகாரன், அதீத பெண்ணாசை கொண்டவன் என முத்திரை குத்துவது, சமூகத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இது கொடுமைக்கு சமமானது” என்று தெரிவித்துள்ளது.







