பிறந்து 38 நாள்களே ஆன குழந்தை குடிநீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா. வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண்குழந்தை உள்ள நிலையில், யாழிசை வேந்தன்(38 நாள்கள்) மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி புதன்கிழமை மாலை குழந்தை யாழிசை வேந்தனை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, பள்ளிக்குச் சென்று மூத்த மகனை கூப்பிடச்சென்றுள்ளார் சித்ரா. சிறிதுநேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது குழந்தையை காணாமல் போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தேடிப்பார்த்தபோது பக்தத்து வீட்டின் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீஸார் குழந்தையின் உடலைமீட்டு பிரேதப்பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகப்படும் நபர்களிடம் விசாரனை செய்தனர். இந்நிலையில் போலீஸார் குழந்தையின் தாயார் சித்ராவிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
38 நாட்களே ஆன குழந்தை யாழிசை வேந்தனுக்கு ஏற்கனவே மூச்சிரைப்பு பிரச்னை இருந்துள்ளதாகவும் இந்நிலையில் சம்பவத்தன்று தாய்ப்பால்
குடிக்கும்போது குழந்தை மூர்ச்சையாகி மயங்கி விட்ட நிலையில் குழந்தை இறந்து விட்டதோ என பயந்துபோன குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என நினைத்து குழந்தையை பக்கத்து வீட்டின் மாடியில் இருந்த சின்டெக்ஸ் தொட்டியில் போட்டுவிட்டு ஏதும் நடக்காததுபோல பள்ளிக்குச்சென்று தனது மூத்த மகனை அழைத்து வந்ததாக வாக்குமூலத்தில் சித்ரா கூறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையைக் காணவில்லை என நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. எனவே குழந்தையின் தாய் சித்திராவை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து, வேறு யாரும் கொலைக்கு உடந்தையாக உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் முப்பத்தி எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை இறந்ததாக நினைத்து தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்து தாய் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








