தென்காசியில் ஆதரவற்ற பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எனக்கூறி மூதாட்டியிடம் கம்மலை பறித்து நூதன மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
தென்காசி மாவட்டம் நகர் பகுதியில் உள்ள மாதாக்கோவில் தெருவில் வசித்து வருபவர் 81 வயது மூதாட்டியான கல்யாணி. பிள்ளைகள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், மூதாட்டி கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஜூலை 11 ஆம் தேதி கல்யாணி வீட்டருகே அமர்ந்திருந்த நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் மூதாட்டியான கல்யாணியிடம் அன்பாகப் பேசி குடும்ப விவரங்களை கேட்டுள்ளார்.
மூதாட்டியும் அந்த இளைஞர் கேட்ட விவரங்கள் அனைத்தையும் கூற, ஆதரவின்றி தனியாக இருக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கல்யாணியிடம் கூறியதாக தெரிகிறது.
ஆயிரம் ரூபாய் தாராங்களா என ஆச்சரியப்பட்ட மூதாட்டி கல்யாணி, அதை வாங்க முடியுமா என இளைஞரிடம் கேட்டுள்ளார். உடனே வாங்க போய் விண்ணப்பித்து வருவோம் எனக்கூறி, கையோடு கல்யாணியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நகர் பகுதிக்குச் சென்ற இளைஞர் ஸ்டுடியோ ஒன்றின் அருகே நிறுத்தியுள்ளார்.
போட்டோ எடுக்கும்போது காதில் தங்கக் கம்மல் எல்லாம் போட்டிருந்தால், வசதியானவர்கள் என நினைத்து ஆயிரம் ரூபாயை தரமாட்டார்கள், ஒன்றும் இல்லாதவர்போல் இருந்தால்தான் பணம் கிடைக்கும் என அந்த இளைஞர் மூதாட்டி கல்யாணியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கல்யாணியும் தனது காதில் அணிந்திருந்த கம்மலைக் கழற்றி இளைஞரிடம் கொடுக்க, அவரும் அதை வாங்கி மூதாட்டியின் பைக்குள் போட்டுள்ளார்.
பின்னர் இங்குதான் போட்டோ எடுக்கப்போகிறோம், நான் சென்று விண்ணப்படிவம் வாங்கி வரும் வரை காத்திருங்கள் என மூதாட்டி கல்யாணியிடம் கூறிவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுள்ளார். வெகு நேரமாகியும் இளைஞர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த மூதாட்டி தனது பையை திறந்து பார்த்தபோது அதில் கம்மல் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்யாணி அங்கேயே அழுது புலம்பினார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விவரம் கேட்டபோது, நடந்தவற்றை அவர்களிடம் கல்யாணி தெரிவித்தார்.
மூதாட்டி மோசடிக்குள்ளானதை அறிந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அங்கிருந்தவர்கள் மூதாட்டி கல்யாணியை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய ட்ரெண்டில் மூதாட்டி மோசடிக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகம் தெரியாத நபர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி பணம், நகைகளைக் கொடுத்து ஏமாறவேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







