தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு!

தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், கருப்பு…

தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வட மாநிலங்களில் மட்டுமே அதிகமாகக் கண்டறியபட்ட கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்திலும் கண்டறியப்படுவதால் சிகிச்சைக்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.


இந்த நோயை குணப்படுத்த ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் சார்பில் தற்போது வரை தமிழக அரசுக்கு 2,470 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

ஜூன் இரண்டாம் தேதி நிலவரப்படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 518 ஆக இருந்த நிலையில், தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதலாக 30 ஆயிரம் மருந்துகளை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகரிக்கும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனோவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திடவும் மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை சார்பில் தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.