தமக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பிக்கேட்டதால், வீணா தம் மீது பொய் புகார் அளித்துள்ளார் என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் சில தினங்களுக்கு முன்பு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடன் பெற்று தருவதாக 1 கோடி ரூபாய் கமிஷன் வாங்கி மோசடி செய்து விட்டார் என ஆர்.கே.சுரேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் தனக்கும் தனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் வீணா தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன் ஆர்.கே.சுரேஷ் ஆஜரானார். அப்போது. தன் மீது வீணா பொய் புகார் அளித்திருப்பதாகவும், அவர் தரப்பில் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் ஆர்.கே.சுரேஷ் புகார் கொடுத்துள்ளார்.
விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை வீணா வாங்கியதாகவும், அதற்கான பத்திரப்பதிவு, ஸ்டாம்புக்காக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் வரை தாமே கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்தரம் அடைந்த வீணா, தம் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







