அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மற்றும் கரூரில் உள்ள சில நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஆகியவற்றில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
அதேபோல சின்ன ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் என்பவரது அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும் அம்பாள் நகரில் உள்ள சங்கரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரைத் தொடர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்து பாலன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அருண் அசோசியேட்ஸ் நிறுவனர் அருண் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.







