ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக அவசரச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
பண்ருட்டி ராமச்சந்திரன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன். இந்தச் சந்திப்பில் எந்த அரசியலும் பேசப்படவில்லை. பாமக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது என்னை தொலைபேசியில் அழைத்து பண்ருட்டி ராமசந்திரன் வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து அவரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். அவரை தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆதரித்த கட்சி பாமக தான். அதற்கு காரணம் திரௌபதி முர்மு, வெற்றி பெற்றால், முதல்முறையாக பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வருவார்.

அதுமட்டுமல்லாமல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த பெண்ணாக அவர் இருப்பதால் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு திரௌபதி முர்முவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதிமுகவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் அந்தக் கட்சியின் உட்கட்சி பிரச்னை. அதை அவர்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 24  உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். அடுத்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் அதை சட்டமாக்க வேண்டும் என்றார் அன்புமணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.