குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள், சலசலப்புக்கிடையே அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்று கடந்த சில வாரங்களாக அதிமுகவில் சர்ச்சை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உச்சக்கட்டத்தை எட்டியது. பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவை பெற்று பொதுக் குழுவில் தனது பலத்தை நிரூபித்தார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முழக்கங்கள் எழுப்பபட்டதால் அவர் பொதுக் குழுவைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.
அதே நேரம் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஓபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளுக்கு எந்தவிதத்தில் உதவிபுரியும் என்கிற விவாதம் தமிழ்நாடு அரசியலில் எழுந்துள்ளது.
இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லியில் இன்று சந்தித்து ஆதரவு கோரினார். ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், குடியரசு தலைவர் தேர்தலில், தமக்கு அதிமுக ஆதரவு அளிக்க திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டதாகவும், அதிமுக முழுமையான ஆதரவை அளிக்கும் என தான் தெரிவித்தாகவும் கூறினார். குடியரசு தேர்தலில் தமக்கு ஆதரவு திரட்ட திரௌபதி முர்மு விரைவில் சென்னை வரஉள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.







