அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் அழகு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு இளைஞர்களை பணிக்கு சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசி கே.எஸ்.அழகிரி, இந்திய ராணுவம் பிற்காலத்தில் ஆர் எஸ் எஸ் ராணுவமாக மாற வாய்ப்பு இருப்பதாலேயே அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டு ஏழு
ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார். மேலும் விக்கிரவாண்டி — தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி துவக்கப்பட்டு எட்டாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார். ரயில்வே துறையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த கே.எஸ்.அழகிரி, அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என்றார். எனினும், ஒற்றை தலைமையே கட்சிக்கு அழகு எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு அரசு அதிக நிதி ஒதுக்கி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.