”நான் பிசிசிஐ-ஐ நம்பி சோர்ந்துவிட்டேன்” – முரளி விஜய் வருத்தம்

தான் பிசிசிஐ-ஐ நம்பி சோர்ந்துவிட்டதாக இந்திய கிரிகெட் வீரர் முரளி விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61…

தான் பிசிசிஐ-ஐ நம்பி சோர்ந்துவிட்டதாக இந்திய கிரிகெட் வீரர் முரளி விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீகில் விளையாடினார். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில், கிரிக்கெட்டைத் தொடர வெளிநாடு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு எனது வயது தடையாக உள்ளது. நான் பிசிசிஐ – ஐ நம்பி சோர்ந்துவிட்டேன். இனி வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்.

இந்தியாவில் 30 வயதை தாண்டிய கிரிக்கெட் வீரர்களை, 80 வயது முதியவர்களாக பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை. ஊடகங்களும் இதை வேறுவிதமாகப் பேச வேண்டும். வீரேந்திர சேவாக்கைப் போல எனக்கு ஆதரவு கிடைத்திருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.