விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மூன்று நாட்களாக ரசிகர்களின் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து, மிதந்து வருவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ’விடுதலை’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம், கடந்த மார்ச் 31ம் தேதி வெளியானது.
இந்த படத்தை இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும் வாழ்த்தையும் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் – அதிர்ந்துபோன பயனர்கள்!!
விடுதலை படத்தின் மாபெரும் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று நாட்களாக உங்களின் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூகவலைதள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.








