”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என எம்ஜிஆரின் பாடலை மோகன்லால் பாடியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” பாடலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. எம்ஜிஆர் சாட்டையை சுழற்றி “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என பாடும் போது அரங்கமே அதிரும்.
எம்ஜிஆரின் இந்த பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சாதாரண கடைநிலை ஊழியர்கள் முதல் பலரும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் இல்லாத காலத்தில் Vibe செய்த பாடல் இது. தற்போது இப்பாடலை மோகன் லால் அச்சு பிசகாமல் பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி மலையாள ஊடகமான மனோரமா தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லான் எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலை மிக நேர்த்தியாகவும், கேஷுவலாகவும் பாடியிருப்பார். இந்த பாடலின் இடையிடையே எம்ஜிஆரின் சிக்னேச்சர் நடனத்தையும் ஆடியிருப்பார்.
இந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த காணொலியை பகிர்ந்து மோகன்லாலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தை ஏற்று மோகன்லால் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.







