புதுச்சேரியின் விடுதலை தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரை சாலையில் போலீசாரின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது. இந்நாள் புதுச்சேரியின் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
மேலும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான நாளைய தினம், புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியிலும் புதுச்சேரி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற இருக்கிறது.
இதற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரையில் இன்று நடைபெற்றது. இதில் காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகள், என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.







